search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாளர் கைது"

    • விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
    • மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று மாலை 6.45 மணி அளவில் முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்தது தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 304-ஐ.பி.சி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கட்டிடம் இடிந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுபான விடுதி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் இதனை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

    நாங்கள் இன்னும் மெட்ரோ ரெயில் பணிக்காக சுரங்கத்தில் துளைபோடும் பணியை தொடங்கவே இல்லை என்றும், எனவே கட்டிட விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதனை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    இதுபற்றி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த துவாம் என்ற வாலிபர் கூறியதாவது:-

    மாலை 3 மணியில் இருந்து 6.45 மணி வரை மதுபான விடுதியில் வேலை செய்யும் 15 பேர் ஓய்வுக்காக சென்றிருந்தனர். இருப்பினும் 14 பேர் வரை மதுபான கூடத்தில் இருந்தோம். மதுபான விடுதிக்கு வெளியில் இருந்து வாடிக்கையாளர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சைக்ளோன் ராஜ் அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களை எங்களால் மீட்க முடியவில்லை.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவித்தோம். எங்கள் கண்முன்னே எல்லாம் ஒரு நொடியில் முடிந்து போய் விட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள் எல்லாம் வெளியில் அலறியடித்து ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவு 10 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் விடுதியில் மதுபோதையில் இருந்திருப்பார்கள். இதனால் உயிர்சேதம் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் விபத்துக்கு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் விபத்து நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மதுபான விடுதியில் உரிமையாளரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த 3 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மதுபான விடுதியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    • மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மதுரை தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர், கடந்த 5 மாதங்களாக ஈரோடு, அசோக புரத்தில், வருண்ஜோதி டெக்ஸ் எனும் பெயரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில், தேனி அல்லி நகரம், பங்களா மேடு திட்ட சாலை, சடைய முனீஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகுமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஜவுளி விற்பனை யில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜூக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி அன்று வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக மேலாளர் மணிகுமார், நிறுவன உரிமையாளர் மோகன்ரா ஜூக்கு போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந் தேதி அன்று மணிகுமார் குறிப்பி ட்டவாறு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

    அதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்துவிட்டதாகவும் மறு நாள் கொடுத்து விடுவதாகவும் கூறிச்சென்றவர் அதன் பின் வேலைக்கு வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாம்.

    இதையடுத்து, மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள்களுடன் மணிகுமாரை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் மணிகுமார் நின்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் யாமினி (வயது22). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று யாமினி அரசு பஸ்சில் காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த யாமினி சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், இளம்பெண்ணிடம் செல்போன் பறித்தது கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியை சேர்ந்த ஸ்டாலின் (30) என்பதும், இவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை சீரநாயாக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் அஜித் (வயது26), பெயிண்டர். சம்பவத்தன்று இவர் பி.என்.புதூர் புதுக்கிணறு வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் அஜித்திடம் பணம் கடனாக கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அஜித்தை அடித்து உதைத்தனர்.

    மேலும் பீர்பாட்டிலால் அவரை தாக்கினர். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சண்டையை விலக்கி விட முயன்றனர். ஆனால், 4 பேர் கும்பல் அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்த அஜித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அஜித்தை தாக்கியது கோவை வீரகேரளம் சிறுவாணி ரோட்டை சேர்ந்த பீடி ரமேஷ் (31), எஸ்.எஸ். பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (27), சீரநாயக்கன்பாளையம் ராஜன் காலனியை சேர்ந்த குட்டிகுரா என்ற சரவணன் (31) மற்றும் பி.என். புதூர் ஜீவா நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் படையப்பா (24) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒரு அறையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது அழகியை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
    • அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு அறையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது அழகியை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அந்த விடுதியின் மேலாளரான தேனியை சேர்ந்த தமிழரசுவை (வயது 26) போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார்.
    • பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள சாமியப்பன் வீதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். இவரது மனைவி ரேஸ்மா (வயது 27).

    இவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எனது பெற்றோர் எங்கள் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் வேணுகோபால் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தனர். அதன் பின்னர் எனது பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டியையும், அசலையும் திருப்பி கொடுத்து விட்டனர்.

    இந்தநிலையில் வேணுகோபால் என்னிடம் வந்து கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது அங்கு வந்த அவர் கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்தார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரேஸ்மா அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் கூடுதல் வட்டி கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய வேணுகோபாலை கைது செய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். #RaidsAtBar #ChennaiBarRaids
    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான சொகுசு பார் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் தனிப்படை போலீசார், அந்த சொகுசு பாரின் உள்ளே அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு, ‘கரோக்கி’ என்ற ஒரு வகையான பாடலுக்கு ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர். சில பெண்கள், மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்கிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அந்த மதுபான சொகுசு பாரின் மேலாளர் கரன்கேபிரியல்(வயது 40) மற்றும் பார் ஊழியர் தாமோதரன்(32) ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    அங்கு ஆபாசமாக நடனமாடிய 6 பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபோல் அனுமதி இன்றி வேறு எந்த சொகுசு பார்களிலாவது ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சொகுசு பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. அங்கு இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #RaidsAtBar #ChennaiBarRaids
    ×